திருச்செந்தூரில் சுவாமிக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். விழாவின் 4ம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல் சாத்தப்பட்டது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. 4-ஆம் நாளான நேற்றுஅதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து, சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக சண்முகவிலாச மண்டபத்தில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மண்டபத்தில் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
மாலையில், திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். புதன்கிழமை இதே நிகழ்ச்சிகளும், வியாழக்கிழமை (நவ. 7) மாலை 4 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன.
கந்த சஷ்டி விழாவையொட்டி, தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் இங்கு வந்து விரதமிருக்கின்றனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அவா்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 18 ஆண்டுகளுக்கு முன்புவரை கந்த சஷ்டி விழாவில் சுவாமி ஜெயந்திநாதருக்கு வைர வேல் சாற்றப்பட்டு வந்தது. அதன்பிறகு, வைர வேல் சாற்றப்படவில்லை. இந்நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு வைர வேல் சாற்றப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் பிரபாகரன் என்பவா், சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மயிலிறகு மாலை அணிவித்து வழிபட்டாா். குஜராத்திலிருந்து பெங்களூருக்கு மயில் இறகுகள் வரவழைக்கப்பட்டு மாலை தயாரிக்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!