பரபரப்பு... 234 ஆண்டுகளில் முதன் முறையாக நாடாளுமன்ற சபாநாயகர் பதவிநீக்கம்..  !! 

 
அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரை சொந்த கட்சியினரே தீர்மானம் நடத்தி பதவி நீக்கம் செய்துள்ள சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி என்பவர் சபாநாயகராக அமர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில்  சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் ஆதரவாக செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து நாடாளுமன்றத்தில்  கெவின் மெக்கார்த்திக்கு எதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்தது.

விவாதத்தின் பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகள் பெற்று தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆளுங்கட்சிக்கு சாதகமான கெவின் மெக்கார்த்தியின் நடவடிக்கைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றை அவர் மதிக்காததே பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர முக்கியமான காரணம் என்றும் குடியரசு கட்சி தலைவர்கள் கூறினர்.

அந்த வகையில் 234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் சொந்த கட்சியினரே சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.