undefined

 கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் பூ,பழங்கள்.. ஏறுமுகத்தில் விலை நிலவரங்கள்..!

 
பண்டிகை நாளையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து வருகிறது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவையொட்டி  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழங்கள், பூக்கள் பெருமளவு வந்து குவிந்துள்ளன. பூக்களை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாகவே விலை ஏறுமுகமாகவே உள்ளது. சாமந்தி பூ இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.70 முதல் 90 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பன்னீர் ரோஸ் ரூ.40, சாக்லேட் ரோஸ் ரூ.80, கனகாம்பரம் ரூ.200, மல்லி ரூ.500, சம்பங்கி ரூ.50, அரளி ரூ.100 வரை உயர்ந்து உள்ளது.

இன்றைய விலை விவரம் வருமாறு:-

சாமந்தி கிலோ ரூ.200 முதல் 240, பன்னீர் ரோஸ் ரூ.120 முதல் 140, சாக்லேட் ரோஸ் ரூ.180 முதல் 200, கனகாம்பரம் ரூ.1000, மல்லி ரூ.1200, சம்பங்கி 200, அரளி 400.
பழங்களை பொறுத்தவரை வாழைப்பழங்கள் உள்ளூரில் பெருமளவு கிடைக்கிறது. ஆப்பிள், காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து வருகிறது. மாதுளை கர்நாடகாவில் இருந்து வருகிறது. சாத்துக்குடி ஆந்திராவில் இருந்து வருகிறது. ஆப்பிள் கிலோ ரூ.120 முதல் 150 வரை விற்கிறது. மாதுளை ரூ.250-க்கு விற்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் காய்கறிகள், மளிகை கடைகள் முன்பு தற்காலிக கடைகள் போட்டுள்ளார்கள். பொரி, கடலை முதல் பழங்கள் வரை மக்கள் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

தற்போது பூ, பழங்கள், காய்கறிகள் எல்லாமே நகரில் பல இடங்களில் ரோட்டோரங்களில் கடைகள் தொடங்கி விற்பனை நடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களும் ஆங்காங்கே பிரிந்து செல்வதால் கோயம்பேட்டில் வழக்கத்தை விட விற்பனை குறைவாக நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த 2 நாட்களுக்கு மேலும் விலை உயரத்தான் வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.