undefined

இன்று மாலை 3.30க்கு துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பு.. அமைச்சரவையில் 3 பேருக்கு ‘கல்தா’...  4 பேர் சேர்ப்பு !

 

இதோ... அதோ... என்று வழக்கம் போல திமுகவின் மேடையில் கட்சி முன்னோர்கள் ஒவ்வொருத்தராக சொல்லி சொல்லி, ஒரே மாதத்தில் பழுத்துவிட்டது.  தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகிய 3 பேருக்கு கல்தா கொடுக்கப்பட்டு, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள்  இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த செந்தில்பாலாஜி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கான இலாகா பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இவரை போலவே, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவை தற்போது 5வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் மாளிகை நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை ஒதுக்குவதோடு, துணை முதல்வராகவும் பொறுப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளார். மேலும், வி.செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கவும் முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களின் பதவியேற்பு விழா, இன்று (செப்.29) பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

அதே நேரம், பால்வளத்துறை அமைச்சரான டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் அளித்த பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுமட்டுமின்றி, அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு கொறடா பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!