சுற்றுலா சென்ற பயணிகள்.. காரில் மறைந்திருந்த 6 அடி ராஜநாகத்தால் பேரதிர்ச்சி..!!

 
சுற்றுலா சென்ற குடும்பத்தினர் காரில் 6 அடி நீள ராஜநாகம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கேரள மாநிலம் சாஸ்தம்கோட்டா பகுதியை சேர்ந்த மனுராஜ் என்பவர் தனது காரில் குடும்பத்துடன் சுற்றுலா தலமான ’கவி’க்கு சென்றுள்ளார். அங்கமூழி சோதனைச்சாவடி அருகே காரை நிறுத்திய போது, காரின் முன்பக்கத்தை மோப்பம் பிடித்தவாறு வளர்ப்பு நாய் சுற்றி சுற்றி வந்தது.

நீண்ட நேரமாக நாய் காரை சுற்றி வந்த நிலையில், பாம்பு இருக்கலாம் என்ற சந்தேகமடைந்த குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காரை முழுமையாக சோதனை செய்தனர். ஆனால், பாம்பு தென்படவில்லை.

இதனால் நிம்மதியடைந்த குடும்பத்தினர் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற போது காரில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில், பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ், நீண்ட நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தார். பாம்பை கண்டறிய பேருதவி செய்து எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.