இன்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!
இன்று நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தினர் பெயர் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நாளை சனிக்கிழமை மற்றும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 23, 24 தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2007ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். பெயர் நீக்கம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும். சிறப்பு முகாம் மட்டுமின்றி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், http://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெயர்கள் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளலாம்.