undefined

 மழை, வெள்ளம் தகவல்களுக்கு ‘TN Alert’ செயலி... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலையில் நடந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதில், “சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வானிலை முன்னெச்சரிக்கையால், பெரிய அளவிலான சேதங்களை நம்மால் தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கைத் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் நமது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ‘TN Alert’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், துறை அதிகாரிகள், காவல்துறை, தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தற்போதைய காலக்கட்டத்தில், ஒருசில மணி நேரங்களிலேயே, பருவ காலத்துக்கான மொத்த மழையும் கொட்டித் தீர்த்து விடுகிறது. இதை எதிர்கொள்வதுதான் மிகமிக முக்கியமானதாக இருக்கிறது. இதனால் பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்ல, பொது மக்களின் அவசியத் தேவையான குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தமிழக அரசு திறம்பட எதிர்கொண்டதன் காரணமாக, பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. அனைத்து அமைச்சர்களும், அனைத்து துறை அதிகாரிகளும், களத்தில் இருந்தனர். பாதிப்பு ஏற்பட்டதே தெரியாத வகையில், உடனடியாக நிலைமையை நாம் சமாளித்தோம்.

அதேபோல, இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ளத் தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், செப்.14 மற்றும் செப்.21 ஆகிய நாட்களில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர்களோடு வடகிழக்கு பருவமழை குறித்து ஆயத்தப் பணிகளுக்காக ஆய்வுக் கூட்டம் நடத்தி, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

இவை அனைத்தையும், அமைச்சர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வானிலை முன்னெச்சரிக்கையால், பெரிய அளவிலான சேதங்களை நம்மால் தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கைத் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் நமது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, வானிலை தரவுகளை உடனுக்குடன் வழங்க, கடந்த 22.8.24 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில கட்டுப்பாட்டு சேவை மையத்தை நான் திறந்துவைத்தேன். முன்பு இருந்த மையத்தை ஒப்பிடும்போது, தற்போது பல்துறை வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்பக் குழுவுடன் இந்த மையம் இயங்கி வருகிறது. மேலும் பலதுறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், ஒருங்கிணைப்பு மையத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது.

பெய்த மழையின் அளவு எவ்வளவு என்பது மழை பெய்யும் நேரத்திலேயே தெரிந்தால்தான், அணைகளில் நீர்திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கைத் தகவல்களை, வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் சரியாக செய்ய முடியும். அதற்காக, நாம் இப்போது 1400 தானியங்கி மழைமானிகளையும், 100 தானியங்கி வானிலை மானிகளையும் நிறுவி, நிகழ்நேர தகவல்களைப் பெற்று வருகிறோம்.

இந்த தகவல்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது கிடைத்தால், அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிட வசதியாக இருக்கும். அதற்காகத்தான் ஒரு முக்கியமான செயலிலைய உருவாக்கியிருக்கிறோம். வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழையளவு, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, உள்ளிட்ட விவரங்களை தமிழிலேயே தெரிந்துகொள்ளக் கூடிய வகையில், தமிழ்நாடு அரசு TN Alert எனும், மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மழை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்.ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல்,கனமழை குறித்த தகவல்களை, நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை