undefined

 மங்கலங்கள் அருளும் திருநகரி கல்யாண ரங்கநாதர் சிறப்புக்கள்...!
 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் அமைந்துள்ளது திருநகரி கல்யாண ரங்கநாதர் திருக்கோவில். இந்த கோவில்   பூம்புகார் கடற்கரைக்கு மிக அருகில் கிழக்கு நோக்கிய 125 அடி உயர ஏழுநிலைகொண்ட ராஜ கோபுரத்துடன்  மனதைக் கொள்ளைகொள்ளும் வகையில் 3  திருச்சுற்றுகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு  திருஞானசம்பந்தர் தனிச்சந்நிதியில் உள்ளார். தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலயம்   1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  108 திவ்ய தேசங்களில் 34வது திவ்ய தேசமாக இது போற்றப்பட்டு வரும் இத்திருத்தலம்   மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும்  சிறப்புகளைப் பெற்றது.  


தென்கலை வைணவ முறைப்படி காலபூஜைகள் நடத்தப்படும் இந்த ஆலயம்  சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. திருமங்கை மன்னர் வேதராஜபுரத்தில் வழிப்பறி செய்ய, பெருமாள் தடுத்தாட்கொண்டார். இதனை உணர்த்தும் வண்ணம் வேடுபறி உற்சவ நிகழ்ச்சி இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. பெருமாள் கல்யாணத் திருக்கோலத்தில் இளம் தம்பதியாகக் காட்சியருள்வதால் கல்யாண ரங்கநாதர் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.   "ஒவ்வொரு ஆண்டும் தைமாதப் பௌர்ணமி தினத்தில்  திருமங்கையாழ்வார் மங்களாசாசன உற்சவ நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  திருமங்கையாழ்வாரின் உற்சவச் சிலையைப் பல்லக்கில் ஏற்றி, திருமணி மாடம் முதல் திருநகரிவரை அழைத்துச் செல்லப்படுவார்.   சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள  11 திருநாங்கூர் கோவில்களிலிருந்து கருட உற்சவர்களை இக்கோவிலில் எழுந்தருளச் செய்வதுடன், திருமங்கையாழ்வாரையும்,  இணையரான குமுதவல்லி நாச்சியாரையும் அம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்வர்.

அப்போது  திருமங்கையாழ்வாரின் பாடிய நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாடல்களைப் பாடுவது கண்கொள்ளாக் காட்சி'' என்கின்றனர் பக்தகோடிகள்.  இந்த ஆலயத்தில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் திருமங்கையாழ்வார் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.  அவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் உண்டு. "ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தரை வணங்கி, பின் ஸ்வாமி, அம்பாள், உற்சவரை வணங்கினால் கலைகள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.   இந்த கோவில் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும்   திறந்திருக்கும்.  
ஆலய அஞ்சல் முகவரி: 
செயல் அலுவலர், 
ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கோவில், 
சீர்காழி வட்டம், 
திருநகரி அஞ்சல், 
மயிலாடுதுறை மாவட்டம்- 609 106.