undefined

உலகின் நம்பர் 1 மாரத்தான் வீரர் சாலை விபத்தில் உயிரிழந்தார்!

 


உலகின் நம்பர் 1 மாரத்தான் வீரரான கெல்வின் கிப்டம், கென்யாவில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.மாரத்தான் போட்டிகளில், உலகின் நம்பர் 1 வீரராக வலம் வந்தவர் கெல்வின் கிப்டம். இவர், தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானாவுடன், நேற்று கென்யாவில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார். சாலை விபத்தில் கெல்வின் உயிரிழந்தது, கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ தகவல் தெரிவித்த பிறகே, வெளியுலகுக்கு தெரிய வந்தது. உடன் சென்ற பயிற்சியாளரும் பரிதாபமாக பலியானார். 


24 வயதே ஆன கிப்டம் சிகாகோ மாரத்தான் போட்டியில் பங்கேற்று, 2மணி நேரம் 35 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார். லண்டன் மாரத்தானை 2 மணி நேரம் ஒரு நிமிடம் 25 வினாடிகளில் கடந்து, ஏற்கெனவே கெல்வின் இன்னொரு உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
கடந்த 2022ல் வாலென்சியா மராத்தானில், கிப்டம் 2 மணிநேரம் ஒரு நிமிடம் 53 வினாடிகளில் கடந்து, வரலாற்றில் மிக வேகமான அறிமுக மராத்தான் சாதனையாளர் என்கிற விருதைப் பெற்றிருந்தார். இவற்றில் சிகாகோ சாதனை, மாரத்தான் ஓட்டங்களில் இதுவரையிலான உலக சாதனையாக திகழ்ந்து வருகிறது. சிகாகோ சாதனையின் மூலமாக உலகின் நம்பர் 1 மாரத்தான் சாதனையாளராக கெல்வின் அங்கீகரிக்கப்பட்டார். 


வரும் ஏப்ரல் மாதத்தில் நடைப்பெற உள்ள ரோட்டர்டாம் மாரத்தானில் கெல்வின் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது. கெல்வின் கிப்டமின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்த உலக தடகளத் தலைவர் செப் கோ, “கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானாவின் இழப்பை அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளோம். சிகாகோவில் கெல்வின் அசாதாரண மாரத்தான் உலக சாதனையை படைத்தபோது, அவரது வரலாற்று சாதனையை நான்தான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தேன். நம்பமுடியாத சாதனைக்கு சொந்தக்காரரான இளம் தடகள வீரரை நாம் இழந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.