undefined

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு கொடூரம்.. அரிவாளால் வெட்டி தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தெங்கியநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனுசாமி (30). இவர் கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள காகித ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியில் தனது உறவினரான பிரியங்காவை (26) திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

வாடகை வீட்டில் வசிக்கின்றனர். முனுசாமி இரவு வேலைக்கு செல்லும் போது பிரியங்கா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி கடந்த 26ம் தேதி இரவு வழக்கம் போல் இரவு வேலைக்கு சென்றார். பிரியங்கா தாழ்வாரத்தில் தனியாக படுத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் முன் விளக்கை அணைத்துவிட்டு உள்ளே சென்று பிரியங்காவின் முகம், கழுத்து, இடுப்பில் அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8.5 பவுன் தாலி செயினை கொள்ளையடித்து சென்றனர்.

காயம் காரணமாக பிரியங்கா மயங்கி கிடக்கிறார். அதிகாலையில் அப்பகுதிக்கு வந்தவர்கள் வீட்டு வாசலில் ரத்தம் கசிவதையும், பிரியங்கா நடைபாதையில் மயங்கி கிடந்ததையும் பார்த்து முனுசாமிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி வந்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மோப்ப நாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாய் அருகில் உள்ள வீட்டை சுற்றி வந்து படுத்ததாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியில் ரத்தம் தோய்ந்த கத்தியை போலீசார் கண்டுபிடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த உறவினர் மற்றும் அந்த தெருவில் இருந்த சிலரை போலீசார் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கைரேகை நிபுணர் வந்து வீட்டின் சுவர்களில் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்தார். விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்களும் வந்து விசாரணை நடத்தினர். பிரியங்கா சுயநினைவின்றி இருப்பதால் அவரை விசாரிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை அரிவாளால் வெட்டி தாலி செயினை பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா