undefined

காசாவில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்.. ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி..!!

 

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினர், கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் கடல் வழியாக காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. இதில், கடந்த சில நாட்களாக தரைவழியாக சென்று தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத குண்டு மழையால் காசாவில் உள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. இந்த நிலையில், ஹமாசின் மத்திய ஜபாலியா படை தளபதி இப்ராஹிம் பியாரி, கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய ஜபாலியா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமையன்று அங்கு இஸ்ரேல் தீவிர தாக்குதல் தொடுத்தது. அத்துடன், ஹமாஸின் சுரங்கங்கள், ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. இதில், இப்ராஹிம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் வீசிய 6 சக்திவாய்ந்த குண்டுகள் குடியிருப்புகள் மீது விழுந்ததில் 400 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

அதேவேளையில், ஹமாஸ் ஆயுத குழுவினரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிர தாக்குதலில் இறங்கியுள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 11 இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 317 இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்றில் இஸ்ரேல் சந்தித்த போர்களில் ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பிலும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர்கதையாகியுள்ளது.