undefined

 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர்... ஆடியோ லீக்கானதால் வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தருவதாக கெஞ்சல்!

 
 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, கேட்பது, பகிர்ந்து கொள்வது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. 

இந்நிலையில், தான் லஞ்சம் வாங்கியது குறித்து ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால், வாங்கிய லஞ்சப் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக கூறி காவல் துறை பெண் ஆய்வாளர் சுமதி கெஞ்சுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (28). பி.இ. பட்டதாரியான இவர், ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022ல் பல்லாவரத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தார் திவ்யா. அப்போது, மணிபாலன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பழகி தங்களது காதலை தனிமையில் சந்தித்து வளர்த்து வந்தனர். அப்போது மணிபாலன் சிறிது சிறிதாக திவ்யாவிடமிருந்து ரூ.19லட்சம் வரை பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் பல முறை நெருக்கமாக இருந்த நிலையில், திவ்யா கருவுற்றிருக்கிறார். பின்னர் மணிபாலன் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, மாத்திரை உட்கொண்டு தனது கருவைக் கலைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் திவ்யாவிடம் மணிபாலன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் திவ்யாவை விட்டு முழுவதுமாக விலகி இருக்கிறார். 

இது குறித்து மணிபாலனிடம் திவ்யா கேட்டபோது, இருவரும் வேறு வேறு ஜாதி என்று கூறி தட்டிக் கழித்துள்ளார். இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, இது குறித்து நடவடிக்கை எடுக்க பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் மணிபாலன் மீது புகார் அளித்துள்ளார். 

திவ்யாவின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, தேவையான நடவடிக்கை எடுக்காமல் இதுவரை ரூ.70 ஆயிரம் வரை பல்வேறு தவணைகளில் திவ்யாவிடமிருந்து லஞ்சமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், திவ்யா தனக்கு நியாயம் கிடைக்க குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். பின்னர், இதுகுறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கும் சென்று புகார் அளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சுமதி, இது குறித்து போனில் திவ்யாவிடம் கேட்பதும், திவ்யா தான் லஞ்சமாக பணம் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம், முதல்வர் அலுவலகம் சென்றதாக கூறுவதும் ஆடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்த மற்றொரு ஆடியோ பதிவில் காவல் ஆய்வாளர் சுமதி, “இதுவரை நான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன். தயவு செய்து இந்த விஷயத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்த வேண்டாம். இல்லையென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கெஞ்சுவதும் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை