undefined

”விவசாயிகள் சாகுறாங்க”.. மகராஷ்டிரா துணை முதல்வர் வாகனத்தின் மீது தக்காளி வீசி கடும் எதிர்ப்பு.!

 
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற வாகனத்தின் மீது விவசாயிகள் காய்கறிகளை வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலையே மகாராஷ்டிராவில் இருந்து தான் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் தான் நாட்டிலேயே அதிக அளவு வெங்காயம் விளைகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வெங்காயத்தின் விலை உயர ஆரம்பித்தது. உடனே உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு கணிசமாக உயர்த்தியது. இதற்கு மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வெங்காயம் அதிக அளவில் விளையக்கூடிய நாசிக் மாவட்ட காய்கறி மார்க்கெட்களில் வெங்காய ஏலத்தை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
13 நாள்களாக நடந்து வந்த போராட்டத்தை கடந்த 3ஆம் தேதிதான் விவசாயிகள் விலக்கிக்கொண்டனர்.சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாசிக் வந்திருந்தார். நாசிக்கில் உள்ள ஒஜ்ஹர் விமான நிலையத்தில் இருந்து தீண்டோரி நோக்கி அஜித் பவார் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து வழியில் அவரது வாகனத்தை மறித்த விவசாயிகள் வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரியை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரி
கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

அதோடு அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சர் சகன் புஜ்பால், சுனில் தட்கரே சென்ற வானகங்கள்மீது வெங்காயம் மற்றும் தக்காளியை வீசி தங்களது எதிர்ப்பை காட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர், விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கின்றனர். வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும். தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்றார். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.