undefined

ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவை குழந்தைகளுக்கு கொடுத்த தாய்.. உணவில் கூல் லிப் இருந்ததால் பேரதிர்ச்சி..!!

 

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கூல் லிப் இருந்ததால் வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் தனது வீட்டில் சிலிண்டர் காலியானதால் குழந்தைக்கு உணவு தர இணையத்தில் உணவு ஆர்டர் செய்திருக்கின்றார்.  சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பிரபல உணவகமான கீதா கேண்டீன் என்ற உணவகத்தில்,  காம்போ ஆஃபரில் தயிர் சாதம்,  சாம்பார் சாதம், வெஜ் பிரியாணி,  பேபி கார்ன் உள்ளிட்டவை  ஆர்டர் செய்தார்.

இதனையடுத்து உணவு டெலிவரி் ஊழியர் மூலம் உணவை பெற்று இருக்கிறார்.  உணவு டெலிவரி செய்யும் பொழுது அதிலிருந்த பார்சல் பிரிந்திருந்ததாக ஜாஸ்மின் ஸ்விக்கி ஊழியரிடம் கூறியிருக்கிறார்.  இதற்கு அந்த ஊழியர் கீதா கேண்டீனில் பார்சலை வாங்கும் போதே அது சற்று பிரிந்து இருந்ததாகவும்,  தான் எடுத்துக் கூறியும் உணவக ஊழியர்கள் அப்படியே தன்னிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். உணவை குழந்தைக்கு கொஞ்சம் ஊட்டிய பிறகு வித்தியாசமான ஒரு பொருள் உணவில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.  பேபி கார்னில் இருந்த அந்தப் பொருள் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களில் ஒன்றான கூல் லிப் என்பதை உணர்ந்த ஜாஸ்மின் அதிர்ச்சி அடைந்தார்.

கூல் லிப் குட்கா உணவில் இருப்பதைப் பார்க்கும் முன்னரே குழந்தைக்கு பேபி கார்ன் உண்ண கொடுக்கப்பட்டதால் சிறிது நேரத்தில் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அந்தப் பெண் இதுபோன்று உணவுகளை அலட்சியமாக டெலிவரி செய்யும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.