கால்கள் உடைந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்த இளைஞர்... விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததால் பரிதாபம்!
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், தனது கால்கள் உடைந்த நிலையில், ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று இளைஞர் ஒருவர் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜோசப். விபத்து ஒன்றில் இவரது கால்கள் உடைந்த நிலையில், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு கால்களில் மாவு கட்டு போடப்பட்ட நிலையில், நேற்று குடும்பத்துடன் ஆம்புலன்சில் சென்றார். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தார். அம்மனுவில், “ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள விசி காலனியில் வசிக்கிறேன். மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தேன்.
கடந்த 6ம் தேதி கிரேன் மூலம் பழைய பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தோம். அப்போது பழைய லாரியின் உதிரிபாகங்களை ஏற்றும் போது கிரேன் கொக்கி அறுந்து லாரியின் பாகங்கள் என் மீது விழுந்தது. எனது இரண்டு கால்களும் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், விபத்து குறித்து அவர்கள் போலீசில் புகார் செய்யவில்லை. கோவையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எனது இரண்டு கால்களும் செயலிழந்து, நானும் எனது குடும்பமும் வறுமையில் வாடுகிறோம். சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு எனது மனைவி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், தாமதமாகி விட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து எப்ஐஆர் பதிவு செய்ய போலீஸார் மறுத்துவிட்டனர்.
இதனால், இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்து குறித்து எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!