undefined

அரசு பள்ளி வகுப்பறையில் சரிந்து விழுந்து ஆசிரியர் மாரடைப்பால் மரணம்... அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல்!

 

அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே திடீரென மாரடைப்பால் சரிந்து விழுந்து ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, சுண்டப்பூர் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் அந்தோணி ஜெரால்ட் (49).  இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் காலை முதல் பாடம் நடத்தி விட்டு, பின் மதிய உணவு அருந்தி விட்டு தொடர்ச்சியாக  மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். 


உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை கார் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே இது குறித்து பள்ளியின் பிற ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆசிரியரைப் பரிசோதித்து பார்த்தனர். இதில் அவர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பர்கூர் போலீசார், ஆசிரியரின் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் மறைவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.

மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று, உழைத்த அந்தோணி ஜெரால்ட், வகுப்பறையிலேயே, தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த கொண்டிருந்த ஆசிரியர் திடீர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எல்லாம் ரூ.1 கோடி நிவாரண தொகை அறிவிக்கும் திராவிட மாடல் அரசு, இது குறித்து இது வரையில் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்று ஆசிரியர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். பணியின் போது உயிரிழந்தாலும் இந்த அரசு இப்படி மெளனம் காப்பது ஏன்? என்று விரக்தியுடன் ஆசிரியரின் இறுதிசடங்கில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவித்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!