undefined

 விசிக நிர்வாகி மரணத்தில் திடீர் திருப்பம்...  நண்பனின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை!

 
 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே விசிக நிர்வாகி மரணம் தொடர்பாக மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது நண்பரின் சடலம் நேற்று தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொழப்பலூர் கூட்டுச் சாலை பகுதியில் வசித்து வந்தவர் பெரணமல்லூர் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சீனுவளவன்(29). இவர், அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் கடந்த 19ம் தேதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்நிலையில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தேசூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் முடிவுக்கு வந்தது.

இது குறித்து தேசூர் காவல்நிலையத்தில் சீனுவளவனின் தந்தை தங்கராஜ் அளித்துள்ள புகாரில், சீனுவளவன் மரணத்துக்கும், சில தினங்களுக்கு முன் உயிரிழந்த கல்யாணபுரம் கிராமத்தில் வசித்து வந்த அவரது நண்பர் சுதாகரின்(42) மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், சுதாகரின் மனைவி உள்ளிட்ட இருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ஆளியூர் கிராம பகுதியில் வசித்த சுதாகர் கடந்த 16ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் சுதாகரின் உடலை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவசர அவசரமாக அடக்கம் செய்துள்ளனர்.

இதையடுத்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலா முன்னிலையில் கல்யாணபுரம் மயானத்தில் புதைக்கப்பட்ட சுதாகரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக தேசூர் காவல்துறையினர் நேற்று தோண்டியெடுத்தனர். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சுதாகரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன்பிறகு, அவரது உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

சீனுவளவன் மற்றும் சுதாகர் மரணம் குறித்து தேசூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், சீனுவளவனின் உடலை வாங்க இரவு சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேரை தேசூர் காவல்துறையினர் கைது செய்தனர். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், "திருவண்ணாமலை மாவட்டம் கோழிப்புலியூர் கிராமத்தைச் சார்ந்த சீனுவளவனின் மரணம் தற்கொலையல்ல. அது திட்டமிட்ட படுகொலை என அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், இவ்வழக்கைக் கொலை வழக்காக காவல்துறை பதிவுசெய்ய வேண்டும்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக விசாரித்துக் கைது செய்ய வேண்டும். அதேபோல சமீபத்தில் அதே மாவட்டம், துரிஞ்சாபுரம் அருகேயுள்ள தேவனாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த இளங்கோவன் என்பவரை உயிரோடு கொளுத்திப் படுகொலை செய்துள்ளனர். அவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இக்கொலையில் தொடர்புடைய சமூகவிரோதக் கும்பலையும் காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!