ஸ்டெர்லைட் தடை உத்தரவை மறுஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி... தீர்ப்பு விபரம் வெளியீடு!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து, கடந்த அக்டோபர் 22ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு இன்று (நவ. 16) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை பட்டியலிடுவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை. மறுஆய்வுக்கான காரணம் எதுவும் நிறுவப்படவில்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விஷயத்தில் நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றவில்லை என்றும் தமிழ்நாடு அரசும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் குற்றம் சாட்டி ஆலையை மூட உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. எனினும், மாநில அரசின் முடிவை 2018ல் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2020ல் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.
இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில், ஒரு தொழில்துறையை மூடுவது ஒரு முதல் தேர்வு அல்ல. ஆனால் வேதாந்தாவின் கடுமையான மீறல்களுடன் நீண்ட மற்றும் தொடர்ச்சியான மீறல்களும் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு உயர்நீதிமன்றத்தையும் சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது.
இந்த ஆலை நாட்டின் தாமிர உற்பத்திக்கு பங்களித்துள்ளது. அப்பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனாலும், நிலையான வளர்ச்சி, பொது நம்பிக்கை மற்றும் மாசுபடுத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது. அவர்களின் கவலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!