சள்ளி சள்ளியா நொறுக்கீட்டிங்களே.. லியோ கொண்டாட்டத்தில் தியேட்டரை புரட்டிப்போட்ட ரசிகர்கள்..!
Oct 5, 2023, 21:30 IST
லியோ ட்ரைலர் வெளியீட்டின் போது ரோகிணி திரையரங்கில் அதிகளவு ரசிகர்கள் ஆராவாரம் செய்ததால் தியேட்டரின் இருக்கைகள் மொத்தமும் நாசமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் லியோ வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக அனிருத் இணைந்து இசையமைத்துள்ளார். மேலும் ட்ரைலர் வெளியான 1 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த ட்ரெய்லரை ரசிகர்களுக்காக சென்னை ரோகினி திரையரங்கில் திரையிட, திரையரங்கம் சார்பாக பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக விஜய் ரசிகர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாலை 4 மணியிலிருந்து கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், லியோ லியோ என கூச்சலிட்டும் ஆரவாரம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு மேலாக ரசிகர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடியதால் திரையரங்கிற்கு வெளியும் உள்ளேயும் ரசிகர்களின் காலனிகள் குவிந்து கிடந்தது. மேலும் 6.30 மணியளவில் திரையில் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் ஆரவாரத்தோடு கண்டு ரசித்தனர். இதேவளையில் ஆயிரக்கணக்கில் வந்திருந்த ரசிகர்கள் இருக்கையின் மீது தாறுமாறாக ஏறி அமக்களம் செய்து இருக்கைகளை நாசம் செய்தனர். இதனால் திரையரங்கில் பல இருக்கைகள் உடைந்து நாசமானது. இதுத்தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைராலாகி வருகிறது.