undefined

எகிறும் எதிர்பார்ப்பு... இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்... யாருக்கு வாய்ப்பு?!

 
உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்பில் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் யாருக்கு வாய்ப்பு என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். 

ஆரம்பத்தில் கமலா ஹாரிஸ் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அவர் டிரம்பை விட முன்னணியில் இருப்பதாக தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது டிரம்ப் முன்னேற துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. வல்லரசு நாடு என்பதால் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் அரசியல் நாகரிக வரம்புகளை மீறி, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸின் பெயரை மோசமாக விமர்சித்தார். இதெல்லாம் ஒரு பெயரா? அவர் இந்தியரா, ஆப்பிரிக்கரா? என்றெல்லாம் கிண்டல் செய்தார். கமலாவின் கணவர் டக்ளஸையும் விமர்சித்தார்.

ஆரம்ப காலத்தில் தான் ஓட்டலில் வேலை செய்து வந்ததாக கமலா ஹாரிஸ் கூறியிருந்ததையும் ட்ரம்ப் கிண்டல் செய்ய மறக்கவில்லை. ஹோட்டலில் சர்வர் போல நடித்து, ஒரு இந்தியருக்கு உணவு வகைகளை சப்ளை செய்து தரக்குறைவான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

‘‘கமலா ஹாரிஸ் மூளை இல்லாதவர், சோம்பேறி. அமெரிக்க அதிபர் ஆக தகுதியற்றவர்’’ என்று கடுமையான வார்த்தைகளால் டிரம்ப் தனது பிரச்சாரத்தில் விமர்சித்தார். அதோடு, வெள்ளை இனவாதத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார்.

அதே சமயம் டிரம்புக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவருக்கு சவால் விடுக்கும் வகையில், கமலா ஹாரிஸும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ‘‘முன்னாள் அதிபர் ட்ரம்ப் சர்வாதிகாரி, நாஜி சிந்தனை கொண்டவர், மனித உரிமைகளை மீறுபவர், பெண் உரிமைகளை மதிக்காதவர், பலவீனமானவர்” என்று கமலா குற்றம்சாட்டி வருகிறார். மேலும், பொருளாதார வளர்ச்சி, வரி சீர்திருத்தம், கருக்கலைப்புக்கு ஆதரவு, எல்லை பாதுகாப்புக்கு முன்னுரிமை, உக்ரைனுக்கு ஆதரவு, இஸ்ரேல் - காசா பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகள் கொள்கை, முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடு விரிவாக்கம், குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கமலா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவை அவருக்கான ஆதரவை பெருகச் செய்துள்ளது.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்துக்காக இதுவரை கமலா சார்பில் ரூ.6,640 கோடியும், ட்ரம்ப் சார்பில் ரூ.3,000 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் 27 மாகாணங்களில் குடியரசு கட்சியும், 23 மாகாணங்களில் ஜனநாயக கட்சியும் ஆட்சி நடத்தி வருகின்றன. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிபர் தேர்தலின்போது இந்த 7 மாகாணங்களின் மக்கள் ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் ஆதரவாக வாக்களிக்கின்றனர். இதனால், அதிபர் தேர்தலில் இந்த 7 மாகாணங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!