undefined

தகுதி மதிப்பெண் குறைப்பு.. முதுகலை நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் வாய்ப்பாம்..!

 

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) 800க்கு 5 மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முதுகலை படிப்புக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், தேசிய மருத்துவ கவுன்சில் (NMC) மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தகுதி சதவீதத்தை பூஜ்ஜிய சதவீதமாகக் குறைத்தது, இது முன்னர் 50 சதவீதமாக இருந்தது. இந்தக் குறைப்பு காரணமாக, புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மூன்றாம் சுற்று முதுகலை படிப்புச் சேர்க்கைக்கு பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றனர்.

இந்தச் சுற்றுக்கான சீட் ஒதுக்கீடு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் முதுகலை இடங்களை பெற்றுள்ளதைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்கள் ஆகும்.
அசல் தகுதி அளவுகோல் 50 சதவீதமாக இருந்தப்போது, 800க்கு 291 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (பொதுப் பிரிவினருக்கு) முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு தகுதியுடையவர்களாக இருந்தனர். தகுதி அளவுகோலை பூஜ்ஜிய சதவீதமாகக் குறைப்பதன் மூலம், -40க்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் இப்போது முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 0 மதிப்பெண் பெற்ற 14 பேரும், மைனஸில் மதிப்பெண் பெற்ற 13 பேரும் அடங்குவர்.

இட ஒதுக்கீடு பட்டியலின்படி, 800க்கு 5 NEET PG மதிப்பெண் பெற்றவருக்கு டெல்லியில் உள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் MD தடயவியல் மருத்துவத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில், மிகக் குறைந்த நீட் பி.ஜி மதிப்பெண் பெற்றவர் 800க்கு 45 மதிப்பெண்களுடன் புனேவில் உள்ள பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரியில் எம்.டி பயோ கெமிஸ்ட்ரியில் மேனேஜ்மெண்ட் இடத்தைப் பெற்றுள்ளார்.
இத்தகைய குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் உடற்கூறியல், மருந்தியல், உடலியல், நுண்ணுயிரியல் போன்ற பிரிவுகளில் இடங்களைப் பெற்றுள்ளனர்; சிலருக்கு தடயவியல் மருத்துவம், தடுப்பு மற்றும் சமூக மருத்துவம், கண் மருத்துவம் போன்றவற்றில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ ஆலோசனை கமிட்டியின் இட ஒதுக்கீட்டைப் பார்த்த பிறகு, விண்ணப்பதாரர்களும் பெற்றோர்களும் இப்போது மாநில அளவிலான ஒதுக்கீட்டுப் பட்டியலில் மேலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களில் பலர் சீட்களைப் பெறுவார்கள் என்று பயப்படுகிறார்கள். "அனைத்திந்திய இட ஒதுக்கீடுகள் ஏற்கனவே நீட் பி.ஜி.,யில் 800க்கு 5 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் போய்விட்ட நிலையில், மாநில அளவில் இது 0 மதிப்பெண்களாகக் குறைக்கப்படலாம்" என்று விண்ணப்பதாரர்களில் ஒருவர் கூறினார்.

பெற்றோர் பிரதிநிதியான பிரிஜேஷ் சுதாரியா கூறுகையில், “இது திறமையான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. தகுதிக்கான அளவுகோல்களை அதிக அளவில் குறைப்பதால், பணம் உள்ளவர்கள் முதுகலை மருத்துவ இடங்களைப் பெறலாம். ஆனால் இதுபோன்ற தகுதிக் குறைப்பை பொது மக்கள் எதிர்ப்பதும் முக்கியம், ஏனெனில் இது எதிர்காலத்தில் எம்.டி மருத்துவர்களின் தரத்தை நேரடியாக கேள்விக்குள்ளாக்குகிறது,” என்று கூறினார்.