undefined

புரட்டாசி 2வது சனிக்கிழமை... அதிகாலையிலேயே நவத்திருப்பதி கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

 
இன்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே நவத்திருப்பதி கோவில்களில் பக்தர்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் கலந்துக் கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

வைணவ ஸ்தலங்களில் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமான நாளாகும். இன்று புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் துவங்கியது. 

உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை வந்து பெருமாளை தரிசித்து வருகின்றனர். நவத்திருப்பதி தலங்களில் 7வது ஸ்தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்கின்றனர். சுவாமி நிகரில் முகில்வண்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கொடிமரம் அருகில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் ’கோவிந்தா கோவிந்தா’ முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்றுச் சென்றனர்.

நத்தம் விஜயாசனப் பெருமாள் கோவிலில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக அரசு சார்பில் 60 வயதிற்கு மேற்பட்ட பக்தர்கள் நவதிருப்பதி ஸ்தலங்களில் வழிபாடு செய்வதற்கு சிறப்பு பஸ்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் முன்பு நடந்தது. நிகழ்ச்சியை ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார். பக்தர்கள் அனைவரும் 9 நவதிருப்பதி கோவில்களுக்கும் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சிரமம் இன்றி வழிபடும் வகையில், பொது தரிசன வழிபாடு தவிர கட்டண தரிசன வழிபாட்டிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் நவதிருப்பதி கோவில்களுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!