undefined

பகீர்.. லீசுக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து  2 கோடி அபேஸ் பண்ண பலே கில்லாடி கைது..!

 
2 கோடி மோசடி செய்தவர் கைது
 லீசுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து 42 பேரை ஏமாற்றி 2.01 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பிரேம் பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் வேளச்சேரி ரோட்டில் சென்னை ஹோப்ஸ் மேனேஜ்மெண்ட், ஈவண்ட் மேனெஜ்மெண்ட் கம்பெனி என்ற பெயரில் வாடகை, மற்றும் குத்தகைக்கு வீடு கிடைக்கும் என்ற அறிவிப்புகளுடன், அலுவலகம் நடத்தி வந்தவர் பிரேம்பாபு மற்றும் இவரது மனைவி சந்தியா.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக வேங்கை வாசல், சந்தோஷபுரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாடகைக்கு உள்ளதாக வைக்கப்படும் டூ லெட் போர்டு போட்ட வீடுகளை குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அதுவும் எப்படி என்றால், வெளியூர் அல்லது வெளிநாடு சென்ற வீட்டின் உரிமையாளர்களை குறிவைத்து இந்த நூதன மோசடியை அரங்கேற்றி பணம் குவித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் முன்பணம் கொடுத்து வீட்டை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இந்த மோசடியில் ஈடுபடுவது பிரேம்பாபு சந்தியா தம்பதியின் வாடிக்கையாக இருந்துள்ளது.

குத்தகைக்கு வீடு தேடுவோரை குறி வைத்து இரண்டு கோடி மோசடி செய்தவர் கைது

அப்படித்தான் தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது பாரூக் என்பவர் 'ஆன்லைன்' வாயிலாக குத்தகைக்கு வீடு தேடியிருக்கிறார். அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பிரேம் பாபுவிடம் பேசியிருக்கிறார். பின், வீட்டை குத்தகை ஒப்பந்தம் போட்டு, 8.5 லட்சம் ரூபாய், காசோலை மற்றும் 'ஜிபே' வாயிலாக பிரேம் பாபுவிற்கு அனுப்பி இருக்கிறார். குத்தகை வீட்டில் குடியேற போகும்போது தான், ஏமாற்றப்பட்டது முகமது பாரூக்கிற்கு தெரிய வந்தது. குறிப்பிட்ட வீட்டில், பிரேம் பாபு வாடகைக்கு குடியிருந்ததும், அந்த வீட்டின் உரிமையாளர் விமலா என்பதையும் கண்டுபிடித்தார். இந்நிலையில் கொடுத்த பணத்தையும் பிரேம் பாபு திருப்பி தரவில்லை. 

இது குறித்து, தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் முகமது பாரூக் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆய்வாளர் ராம்தாஸ் தீவிர விசாரணை மேற்கொண்டார்.இதில், வாடகை வீட்டை காண்பித்து, பிரேம்பாபு குத்தகை தொகை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதேபோல 42 நபர்களிடம், 2.01 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, பிரேம் பாபுவை நேற்று முன்தினம் கைது செய்த தாம்பரம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி செய்த பணத்தை வைத்து ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இவர் மேலும் பலரை ஏமாற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பொதுமக்கள் புகார் கொடுத்தால் மட்டுமே மோசடி எவ்வளவு என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தார்கள்.