undefined

 உடல் உறுப்புகள் தானம் .. அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட விவசாயி.!!

 

கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணகுமார். இவர் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார். அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து கடலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு சுயநினைவு திரும்பாததை அடுத்து மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்து இருப்பதால் கடலூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரின் முன்னிலையில் கிருஷ்ணகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்த கிருஷ்ணகுமாருக்கு மகன் மற்றும் மகள் இருப்பதால் அவரது குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.