புதிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை... எஸ்.பி., அதிரடி அறிவிப்பு!
பொது இடங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில், புதிதாக விநாயகர் சிலை வைக்க அனுமதி கிடையாது என ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி., சுந்தரவதனம் பேசினார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழாவாகும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக குமரி மாவட்டத்தில் மற்ற இடங்களை விட விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பா.ஜனதா உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
இதுபோக வீடுகள், கோவில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.
மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி., மதியழகன் முன்னிலை வகித்தார். இதில் இந்து மகா சபா, இந்து முன்னணி, சிவசேனா, பா.ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம், “குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைத்த இடத்தில் மட்டுமே இந்த முறையும் சிலைகள் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் சிலைகள் அனைத்தும் போலீசாரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிலைகளின் உயரம் 10 அடி அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தில் வெடி போடவோ, கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கி பயன்படுத்தவோ அனுமதி கிடையாது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அரசு என்ன விதிமுறைகளை கூறியுள்ளதோ அதை கடைபிடிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது கொடுக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். விநாயகர் சிலைக்கு கொட்டகை அமைக்க ஷீட்டுகளை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். சிலை வைத்துள்ள சம்பந்தப்பட்டவர்களும் இரண்டு தன்னார்வலர்களை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
ஊர்வலத்தின் போது வாகனத்தில் ஆன்மிக பாடல் மட்டுமே ஒலிபரப்ப வேண்டும். கண்டிப்பாக மது அருந்திவிட்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கக் கூடாது. குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், சிறப்பாக ஊர்வலத்தை நடத்தவும் அனைவரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா