சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
இன்று அதிகாலை முதலே சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவிலில் ஒரு இடத்திலும், கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இதனையடுத்து இந்த வழக்கை வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹ்ரிர்' என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஆறு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர்.
மருத்துவர் ஹமீது உசேன், அவருடைய தந்தை மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய ஆறு பேரையும் போலீசார் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை, தாம்பரம், கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.