மகாளய அமாவாசை... ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... முன்னேற்பாடுகள் தீவிரம்!
நாளை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே நாடு முழுவதும் இருந்தும் சாரை சாரையாக பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிய தொடங்கியுள்ளனர். மகாளய என்றால் மிகப்பெரிய என்று அர்த்தம். இந்நாளில் லட்சக்கணக்கான மக்கள் இறந்த தமது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபு.
தமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தொடங்கி காவிரி தீர்த்தகரைகள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி வரை பெரும்பாலான ஆலயங்களில் பக்தர்கள் அமாவாசை தினங்களில் அதிகாலை முதலே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டு பாவங்களை போக்கும் புண்ணிய ஸ்தலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அதிலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடி, கோவிலுக்குள் இருக்கும் 22 புனித தீர்த்தத்தில் நீராடி ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் வழிபடுவர். நாளைய தினம் மகாளய அமாவாசை என்பதால் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் 4 ரத வீதிகளிலும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக பிற மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் பணி அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களை ஒருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் நகரின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை, சேலம், கோவை, பெங்களூரூ உட்பட பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்தும் நாளை மாலை முதலே சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!