"தமிழ் சினிமாவில் லட்சக்கணக்குல பாலியல் புகார் இருக்கு... குறைந்தது 500 பேர் சிக்குவாங்க” அதிர வைத்த நடிகை!
மலையாள திரையுலகைப் புரட்டிப் போட்ட ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழில் அது போன்ற பிரச்சனைகள் இல்லை. அதெல்லாமே மலையாளத்துல தான்” என்று பேசிய நடிகர் ஜீவா, "இதுவரைக்கும் ஒரு புகார் கூட எங்களிடம் வரவில்லை” என்று கூறிய விஷால் ஆகியோரை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகையில், தமிழ் சினிமாவில் மட்டும் அப்படியொரு பாலியல் புகார் குறித்து அறிக்கை வெளியாச்சுன்னா குறைந்தது 500 பேராவது அதில் சிக்குவார்கள்... தமிழ்ல லட்சக்கணக்குல பாலியல் புகார் இருக்கு” என்று கூறி அதிர வைத்திருக்கிறார் நடிகை ரேகா நாயர்.
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்தியத் திரையுலகை பெரிதும் பாதித்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கியவர்கள் பிரபலங்கள். திரைத்துறையில் தங்களது ஆளுமையை நிரூபித்தவர்கள். ஆனாலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளை விட மலையாள நடிகைகளிடையே ஒற்றுமை இருப்பதை பிற மொழி நடிகைகள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். யாரும் புகார் தெரிவித்த நடிகையை வசைப்பாடவில்லை. அடுத்தடுத்து புகார்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கு சினிமாவிலும் இப்படி அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என்று அக்கட தேசத்து பாலியல் சுரண்டல் குறித்து தைரியமாக குரல் கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்திருந்த நடிகை ரேகா நாயர் அதில், “அனைத்து மொழி சினிமாவிலும் பாலுயல் அத்துமீறல் உள்ளன. தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகள் முதல் இன்று தான் ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருக்கும்? என்று தெரிந்த பெண் வரை அனைவரும் இதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான் குரல் கொடுத்தால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்படாது. அதனால் தான், சில நடிகைகளும் நமக்கு எதற்கு இந்த வேலை என்று இருக்கிறார்கள். மலையாளத்திலாவது 10 முதல் 20 பேர்தான் சிக்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அப்படி அறிக்கை வெளியானால் 500க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள்” என்று பேசியிருக்கிறார். நடிகை ரேகா நாயரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.