பழநி முருகன் கோவிலில் இன்று மீண்டும் நடந்த கும்பாபிஷேகம்... சேதமடைந்த ராஜகோபுரம் சீரமைப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான ஒரு பகுதி (டகோரம்) சீரமைக்கப்பட்டு இன்று (அக்.24) காலை மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ராஜகோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதி (டகோரம்) உடைந்து சேதமடைந்தது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பரிகார பூஜைகள் செய்து கோபுரத்தை சீரமைக்கவும், சிறிய அளவில் கும்பாபிஷேகம் நடத்தவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த சில தினங்களாக ராஜகோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதியில் சேதமான கோபுரத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று (அக்.24) காலை 5.30 மணிக்கு மேல் லகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர், யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலை சுற்றி வந்தனர். தொடர்ந்து, ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!