மறைந்த சிபிஎம் தலைவரின் உடலை பாதுகாப்பாக வைக்கவும்; மகளின் மனுவைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
கேரளத்தில் மறைந்த சிபிஎம் தலைவர் எம்எம் லாரன்ஸ் உடலை களமசேரி மருத்துவக் கல்லூரி பிணவறையில் பாதுகாப்பாக, லாரன்ஸ் மகளின் மனுவைத் தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கும் முடிவை எதிர்த்து அவரது மகள் ஆஷா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்து, உடற்கூறியல் சட்டத்தின் கீழ் இந்த விஷயத்தை முடிவு செய்யட்டும் என்றும், அதுவரை உடலை மருத்துவக் கல்லூரியில் வைக்க வேண்டும் என்றும், அதுவரை கல்வித் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த சிபிஎம் தலைவர் எம்எம் லாரன்ஸ், தனது உடலை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதவில்லை என்றும், தனது சுயசரிதையில் கூட இது குறித்து அவர் குறிப்பிடப்படவில்லை என்றும் அவரது மகள் ஆஷா நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், உடலை கல்விக்காக கொடுக்க வேண்டும் என்று லாரன்ஸ் வாய்மொழியாக கூறியதாக மற்றவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
லாரன்ஸின் உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கக் கூடாது என்றும், அவ்வாறு அவர் கூறவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் லாரன்ஸின் உடல் களமசேரி மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட இருந்த போது அவரது மகள் ஆஷா இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த லாரன்ஸ் உடல், நேற்று காலை 7:30 மணி முதல் பொதுமக்கள் பார்வைக்காக வீட்டில் வைக்கப்பட்டு, பின்னர் சிபிஎம் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான லெனின் மையத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. எர்ணாகுளம் டவுன் ஹாலில் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. லாரன்ஸ் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட சிபிஎம் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.