undefined

 

இன்று தொடங்குகிறது அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாடு!

 

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இன்று ஆகஸ்ட் 24 மற்றும் 25ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 2 நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சமயப் பெரியோர், ஆன்மிக அன்பர்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டு நிகழ்ச்சி விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்டு 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனி இணையதளம் தொடங்கப்பட்டு இதுவரை இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான நபர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளதோடு, 1,003 நபர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.  

மாநாட்டில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி போன்றவை அமைக்கப்படுவதோடு, திருமடங்களின் தலைவர்கள், உலகளவில் சமயப் பெரியோர்கள், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலையுலக ஆன்மிக அன்பர்கள், முருகப் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். 

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியானது மங்கள இசையுடன் தொடங்கி, மாநாட்டு கொடியினை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். சிறப்புக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வேல் கோட்டத்தினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்திடவும் உள்ளார்கள். 

அதனைத் தொடர்ந்து, மாநாட்டின் தொடக்க விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடக்கவுரை ஆற்றவும், தருமபுர ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கவும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.சுப்பிரமணியன், பி.புகழேந்தி, வி.சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றவும் உள்ளனர். 

 

பின்னர், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து "உலகளாவிய உயர்வேலன்" என்ற தலைப்பில் மலேசியா நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு துணை மந்திரி ஒய்.கி.டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டைமான், இங்கிலாந்து இப்ஸ்விச் மேயர் இளங்கோ கே.இளவழகன், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆறுமுகம் செந்தில்நாதன், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றிடவும், கலைமாமணி சுகிசிவம் தலைமையில் முருகன் புகழ் வளர்க்கும் முத்தமிழில் "முந்து தமிழ்" என்ற தலைப்பில் சிந்தனை மேடையும், கலைமாமணி சுதா ரகுநாதன் குழுவினர் மற்றும் ஊர்மிளா சத்தியநாராயணன் ஆகியோரின் இசை நாட்டிய நிகழ்ச்சிகளும், கருத்தரங்கம் மற்றும்  கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியினை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைக்கிறார். கோவை கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கவும், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பின் தலைவர் செங்கண் குமரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் சிறப்புரையாற்றவும், கலைமாமணி தேச மங்கையர்க்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம், இசைப்பேரரசி டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் நிகழ்ச்சி, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வேலுபிள்ளை கணேஷ்குமார், இங்கிலாந்து துணை மேயர் அப்பு தாமோதரன், இலங்கையை சேர்ந்த ஆறுதிருமுருகன், கவிஞர் இரா.உமாபாரதி  ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

மாநாட்டின் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.வேல்முருகன் கலந்துகொண்டு, தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழ கவிராயர் என  15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்திட உள்ளார். 

அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்  அருளாசியுடன் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இம்மாநாடு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென்மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமை கொள்ள செய்யும் வகையில் சிறப்பாக அமைந்திடும். இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா