காசநோய் பரவல் ... 33 நடமாடும் வாகனங்கள் மூலம் தீவிர பரிசோதனை!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக காசநோய் பரவி வருகிறது. இதன் பாதிப்பை தடுக்க கிராமப்புறங்களில் 33 நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், துப்பும்போது காசநோய் காற்றில் பரவி வருகிறது. அந்த காசநோய் காற்றில் இருக்கும் போது அதை சுவாசிக்கும் நபருக்கு இந்த தொற்று பரவுகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால் 100க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வில் தெரிவந்துள்ளது. இத்தகைய கொடூரமான நோயை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிவதற்கு பரிசோதனைகள், சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து மருந்துகள், முதுலுதவிகள் கிடைக்கிற வகையில் ‘வாக் இன் சென்டர் – ஒன் ஸ்டாப் டிபி சொல்யூஷன்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடமாடும் வாகனம் மூலம் பல்வேறு கிராமப்புறத்தில் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 33 நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஜனவரி முதல் தற்போது வரை இந்த பரிசோதனை வாகனம் மூலம் 977 பேர் காசநோய் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்த சுகாதாரத்துறை தரப்பில் காசநோய் பரிசோதனை, குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்வது மூலம் அந்த நோய் பரவலை தடுக்க அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கிராமப்புற மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இலவச காசநோய் பரிசோதனை மேற்கொள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 33 நடமாடும் வாகனங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நடமாடும் வாகனங்களில் எக்ஸ்ரே இயந்திரத்துடன் ஸ்பூட்டம் சோதனைகள் மேற்கொள்கின்றனர். இந்த வாகனம் மூலம் குறைந்த மின்சாரம் உள்ள பகுதிகளில் கூட, அறிகுறி இல்லாமால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிய உதவுகிறது.
மாவட்ட காசநோய் அதிகாரிகள், செங்கல் சூளைகள், பருத்தி ஆலைகள் மற்றும் கட்டுமான தளங்கள் ஆபத்துள்ள பகுதிகளில் கவனம் செலுத்தி பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜனவரி முதல் தற்போது வரை இந்த பரிசோதனை வாகனங்கள் மூலம் 977 பேர் காசநோய் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.