குட் நியூஸ்... இந்திய ஏஐ ஆய்வகம் விண்வெளியில் தொடக்கம்!
இந்தியா விரைவில் விண்வெளியில் ஏஐ ஆய்வகம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஹைதராபாத்தைச் சோ்ந்த 'டேக் மீ 2 ஸ்பேஸ்' என்ற புத்தாக்க நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை எளிதாக அணுகவும் குறைந்த விலையில் மேற்கொள்ளும் வகையில் சுற்றுப்பாதை உள்கட்டமைப்பு- தொழில்நுட்ப விளக்கமாதிரி (எம்ஓஐ-டிடி) என்ற ஏஐ ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.
இதுவே விண்வெளியில் இந்தியா அமைக்கும் முதல் ஏஐ ஆய்வகம். எம்ஓஐ-டிடி, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-60 ராக்கெட் மூலம் டிசம்பா் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.மேக மூட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் செயற்கைக்கோள்கள் அனுப்பும் 40 சதவீத தரவுகளை அணுக முடியவில்லை. அதே சமயத்தில் பூமியில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகே அந்த தரவுகளை பெறும் சூழல் உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
எனவே, விண்வெளியில் நேரடியாகவே இந்த தரவுகளை அணுகி பயனாளா்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும் தரவுகள் பரிமாற்ற செலவு மற்றும் தாமதத்தை குறைக்கவும் இந்த ஆய்வகம் நிறுவப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆா்பிட்லேப்': சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடுகள்அழித்தல் கண்காணிப்பு, கடல்சாா் பணிகள் மேற்பாா்வை, கரியமிலவாயு உமிழ்வு கண்டறிதல் உள்ளிட்ட புவி கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்பாக எம்ஓஐ-டிடி வெளியிடும் ஏஐ தகவல்களை 'ஆா்பிட்லேப்' என்ற வலைதளத்தில் பயனாளா்கள் பெறலாம்.
இந்த ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பணியில் முதல்கட்டமாக மலேசியாவில் உள்ள ஒரு முக்கிய பல்கலைக்கழகமும், இந்தியாவிலிருந்து 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவா் குழுவினரும் இணைந்துள்ளன. வருங்காலத்தில் விண்வெளியில் தரவுகள் மையம் அமைப்பதற்கான முன்னோடியாக இந்த ஆய்வகம் திகழவுள்ளது.
தற்போது புவி கண்காணிப்பு சாா்ந்த ஆய்வுகளே செய்யப்படவுள்ள நிலையில் வருங்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு துறைகளுக்கு பலனளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வகத்தின் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை விண்வெளியில் தனியாா் துறை பங்களிப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் கிளை பிரிவான 'இன்-ஸ்பேஸ்' அமைப்பே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!