இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்... அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு!
முத்துராமலிங்க தேவர், இம்மானுவேல் சேகரனார், பூலித்தேவன், அழகுமுத்துகோன் என்று மறைந்த முன்னோர்களுக்கு, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவது அடுத்த தலைமுறையினருக்கு அவர்களின் தீரத்தையும், புகழையும், வாழ்ந்த சிறப்பையும், தன்னலமற்ற உழைப்பையும் சொல்லிக் கொடுப்பதும் கூட. ஆனால், தமிழகத்தில் சமீபமாக இது போன்ற நிகழ்வுகளில் வன்முறை, குற்றச்செயல்கள், ஏதோ விடுமுறைக்கான கொண்டாட்டங்களைப் போல மாற்றி வருகிறார்கள் ஒரு சிலர். அமைதியாக சென்று அஞ்சலி செலுத்துவதை கட்சிக் கொடி கட்டி, பேனர் வைத்து, போலீசார் அசம்பாவிதங்களுக்கு பயந்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட்டு, பாதுகாப்புக்கு நின்று என்று ஊரே ஒரு வித பதற்றத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இம்மாதம் செப்டம்பர் 11ம் தேதி, சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமுதாய அமைப்பாளர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நினைவு தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.
அஞ்சலி செலுத்த செல்பவர்களின் வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்களின் விவரங்களை செப்டம்பர் 6ம் தேதிக்கு முன்பாக சம்மந்தப்பட்ட உட்கோட்ட காவல் அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்று கொண்டு, அஞ்சலி செலுத்த செல்லும்போது வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாமல் செல்ல அனுமதி இல்லை.
வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்தி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தியோ மேற்கூரையில் அல்லது படிக்கட்டிலோ பயணித்து செல்ல கூடாது. வாகனங்களில் ஆயுதம் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா