அக்னியை வலம் வரலன்னா...  கல்யாணமே செல்லாது... உயர்நீதிமன்றம் பகீர்!!

 
அக்னியை முறையாக வலம் வரவில்லை என்றால் இந்து திருமணம் செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் சிக்கிம் சிங் என்பவர் தனது மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்து கொண்டதாகப் புகார் அளித்தார்.
இதனை எதிர்த்து ஸ்மிருதி சிங் என்ற அந்த பெண் அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அக்னியை சுற்றி வரும் சப்தபதி மற்றும் பிற சடங்குகள் இல்லையென்றால் இந்து திருமணம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங், “திருமணம் என்ற வார்த்தையின் அர்த்தம், திருமணத்தை முறையான சடங்குகளுடன் நடத்தப்பட வேண்டும் என்பது தான். ஆகையால், திருமணம் முறையான சடங்குகள் இல்லாமல் நடத்தப்பட்டால் அதைத் திருமணமாக கருத முடியாது.

முறையாகத் திருமணம் நடைபெறவில்லை என்றால் தற்போதைய சட்டப்படி அதைத் திருமணமாகவே கருத முடியாது. அதன்படி, இந்து சட்டத்தின் கீழ் 'சப்தபதி' எனப்படும் அக்னியை சுற்றி வரும் சடங்கு தவிர்க்கவே கூடாத ஒன்றாகும். ஆனால், இந்த வழக்கில் 'சப்தபதி' நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். இந்து திருமணச் சட்டம், 1955இன் பிரிவு 7ஐ அலகாபாத் உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த சட்டத்தின்படி இந்து திருமணம் என்பது முறையான சடங்குகளைக் கடைபிடித்து நடக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மணமகனும், மணமகளும் அக்னியைச் சுற்றி 7 அடி நடக்கும் சப்தபதி சடங்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில், ஏழாவது அடி எடுக்கும்போது தான் திருமணம் முழுமையாவதாகக் கருதப்படுகிறது.

இந்த வழக்கில் நீதிபதி மேலும் கூறுகையில், "சப்தபதி சடங்கு குறித்து புகாரிலும் சரி, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்திலும் சரி எந்தவொரு தகவலும் இல்லை. எனவே, இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே, அந்த பெண் குற்றம் செய்ததாக நீதிமன்றம் கருத முடியாது” என்று அவர் அலகாபாத்  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.