undefined

வழக்குப் போட்டால் தான் வழிக்கு வருகிறார்கள்... நிவாரண நிதி தர உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட போகிறோம்... ஆவேசமான ஸ்டாலின்!

 

கவர்னர் பதவி பிரமாணம் செய்யவில்லை என வழக்கு, சட்ட முன்மொழிவை மறுக்கிறார் என வழக்கு என்று ஒவ்வொன்றுக்கும் வழக்குப்போட்டால் தான் வழிக்கு வருகிறார்கள். நிவாரண நிதி தர மறுப்பதற்கும் வழக்கு போட போகிறோம்  என்று முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். 


மேலும் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்னால், குமரிக்கும் திருநெல்வேலிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். தேர்தல் வந்துவிட்டது என்று இப்போது அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே… வெள்ளம் வந்தபோது எங்கு இருந்தீர்கள்… இரண்டு இயற்கைப் பேரிடர். அடுத்தடுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும் – தென் மாவட்டங்களையும் தாக்கியது… பிரதமர் மோடி அவர்களே… ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா? இல்லையே! நிதிதான் தரவில்லை… ஓட்டு கேட்டு வந்தபோது மக்களுக்கு ஆறுதல் வார்த்தையாவது கூறினீர்களா? ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்குச் செய்ய வேண்டியதை தர வேண்டியதை உதவ வேண்டியதை – உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டோம்.

அமைச்சர்கள் எல்லோரையும் இங்கே அனுப்பி வைத்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சைகள் அளிக்க, தொற்று நோய் எதுவும் வராமல் இருக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டேன். அதேபோல, உழவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைக் களத்திற்கு அனுப்பினேன். 

தமிழ்நாட்டின் மொத்த அமைச்சர்களும் இங்கு வந்து தங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். மக்களோடு மக்களாக கூடவே இருந்து, ஆறுதல் கூறி, என்ன தேவைகள் என்று கூடவே இருந்து, வேண்டியதை செய்து கொடுத்தார்கள். நானும், டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினேன். இரண்டு இயற்கைப் பேரிடர்களுக்கான இழப்பீடு மறு சீரமைப்பு நிவாரணத் தொகையாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். தொடர்ந்து கேட்கிறோம்… தந்தார்களா? இல்லை.

நாம் உரிமையோடு கேட்பதைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்டத்துக்குக் கையெழுத்து போடச் சொல்லுங்கள் என்று நீதிமன்றம் சென்றோம். பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வலியுறுத்த நீதிமன்றம் சென்று வென்றோம். இப்போது நிதி கேட்டும் நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமென்றால், அதற்கும் தயார். பா.ஜ. எத்தகைய, ஓரவஞ்சனையான அரசாக நடந்து கொண்டிருக்கிறது? ஓரவஞ்சனை மட்டுமா செய்கிறார்கள்? நிதியையும் தராமல் நம்முடைய மக்களை ஏளனம் வேறு, செய்கிறார்கள். கேலி, கிண்டல் செய்கிறார்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிவாரண நிதியும் தரமாட்டார்களாம். மாநில அரசே மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் அதையும் ‘பிச்சை’ என்று ஏளனம் செய்வார்களாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் அரசின் கடமை. அதைக் கேட்பது மக்களின் உரிமை. மக்களாட்சியில் மக்களையே அவமதித்தபோதே உங்களின் தோல்வி உறுதியாகிவிட்டது. 

தமிழ்நாட்டையும் – தமிழ் மக்களையும் உங்களை மாதிரி வெறுத்த வஞ்சித்த ஒரு பிரதமர், இந்திய வரலாற்றிலேயே கிடையாது. நீங்கள் வடிக்கும் கண்ணீரை உங்கள் கண்களே நம்பாது… பிறகு எப்படி தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்புவார்கள்? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்தீர்களே… நீங்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் அதுதான். அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது. பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. உங்கள் குஜராத் மாடல் நிர்வாகத்திற்கு அதுதான் எடுத்துக்காட்டு. 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார்கள் என்று 2014ம் ஆண்டு பிரதமர் ஆவதற்கு முன்னால் இதே கன்னியாகுமரியில் கூறினீர்களே… தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு சோனியா காந்தியும், ஜெயலலிதாவும்தான் என்று கூறினீர்கள். பத்தாண்டுகள் முடிந்துவிட்டதே, இப்போது பெயர்களை மட்டும் மாற்றி, தி.மு.க.வும் – காங்கிரசும்தான் காரணம் என்று கூறுகிறார்.

மோடியின் ஆட்சி அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே சாதகமான ஆட்சி. ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சி எல்லோருக்கும் பொதுவான ஆட்சி. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ. இந்தப் பல்லவியை அனுமதித்தால், ஒரே ஒரு மனிதர் மன்னராக இருக்கும் ஆட்சியாக இந்தியா மாற்றப்பட்டு விடும். நாடு இப்படிப்பட்ட பேராபத்தில் சிக்கியிருக்கிறதுஆனால் இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல், எந்தக் கொள்கையும் இல்லாமல், வளைந்த முதுகுடன் வலம் வருகிறார் பழனிசாமி.

மோடி பற்றியோ, பா.ஜ பற்றியோ – கண்டித்துப் பேசத் தெம்பு இருக்கிறதா பழனிசாமிக்கு. உங்களின் கள்ளக்கூட்டணி கபட நாடகத்தில்கூட பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான துணிவு இல்லையா? பா.ஜ.க.விற்கு எதிரான வாக்குகளை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று களமிறக்கப்பட்டிருக்கும் மறைமுக பா.ஜ.க. வேட்பாளர்கள்தான், பழனிசாமியால் களமிறக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வேட்பாளர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தி.மு.க. சார்பில் நாங்கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியபோது – "எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்?” – என்று பா.ஜ.க.விற்கு டப்பிங் பேசியவர்தான் பழனிசாமி.

இப்போது பா.ஜ.க.வின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் தனியாகப் போட்டி போடும் கபட நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். பா.ஜ.க.வை விமர்சிக்காமல், எதிர்க்காமல், தமிழ்நாட்டையே நாசப்படுத்த துணைபோகும் பழனிசாமி, "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்று சபதம் எடுக்கிறார். தன்னுடைய விரல்களால் தமிழ்நாட்டு மக்களின் கண்ணைக் குத்திய பழனிசாமி எடுப்பது சபதம் அல்ல; வெற்றுச் சவடால். 

கோடிக்கணக்கான தாய்மார்கள் முகத்தில் புன்னகையையும் கோடிக்கணக்கான தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிற திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டு சீர் இருக்கிறது என்று மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள் உரிமையோடும், பாசத்தோடும் சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வெறும் வயிற்றுடன் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது…

குழந்தைகள் நலமாக இருந்தால்தான், நாடு வளமாக இருக்கும் என்று, பெருந்தலைவர் காமராசர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் போன்றே, நமது ஆட்சியில், நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள். இப்படியான திட்டங்களை விரிவுபடுத்த நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்த நாடாளுமன்ற தேர்தல். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். 

நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினர். பா.ஜ.வை விமர்சிக்காமல், எதிர்க்காமல், தமிழ்நாட்டையே நாசப்படுத்த துணைபோகும் பழனிசாமி, ‘ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்’ என்று சபதம் எடுக்கிறார். தன்னுடைய விரல்களால் தமிழ்நாட்டு மக்களின் கண்ணைக் குத்திய பழனிசாமி எடுப்பது சபதம் அல்ல; வெற்றுச் சவடால்" என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்