பொறி வைத்து மான் வேட்டை.. வனத்துறை அதிகாரி உட்பட நால்வர் அதிரடியாக கைது..!

 
 வயநாட்டில் மான் வேட்டையாடிய வனத்துறை ஊழியர் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான வனப்பகுதி உள்ளது. இங்கு மான், புலி, சிறுத்தை, யானைகள் உள்பட வனவிலங்குகள் உள்ளன. வனத்தை ஒட்டி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு. இங்கு அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடுவது வழக்கமாக ஒன்றாக உள்ளது. 

இந்நிலையில் மானந்தவாடி அருகே உள்ள காட்டிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் மான் இறைச்சி இருப்பதாக தோல்பெட்டி வனவிலங்கு சரணாலய உதவி வனத்துறை அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுக்குறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த தாமஸ் (67) என்பவரது வீட்டில் இருந்து 50 கிலோ மான் இறைச்சியும், மானை வெட்ட பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவரை கைது செய்து விசாரணையில் ஈடுப்பட்டனர்.

மேலும் அவருடன் குரியன் (58), தங்கச்சன் (51), சந்திரன் (47) ஆகிய 4 பேர் பொறி வைத்து மான் வேட்டையாடியது தெரியவந்தது. இவர்களில் குரியன், தாமசின் தம்பி ஆவார். சந்திரன் தற்காலிக வன பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். மான் வேட்டையில் ஈடுப்பட்டத்தால் உடனடியாக அவர் பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.