பரபரப்பு.. கொடூரமாக குண்டு வீசி கொல்லப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் மகன்..!

 
ஊராட்சி மன்ற தலைவரின் மகன் மீது குண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கல்யாணி. இவர்களது மகன்கள் அன்புராஜ், அன்பரசு. ஏற்கெனவே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவராக ரவி பதவி வகித்துள்ளார். அவரது மனைவி கல்யாணி, தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களின் 2வது மகன் அன்பரசு, அதே ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு கீரப்பாக்கம், துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சேகர் (எ) தனசேகரின் 2வது மகன் நவீன்குமார் மறைவைத் தொடர்ந்து, அவரது படத்திறப்பு விழாவுக்காக, தனது 6 நண்பர்களுடன் அன்பரசு சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள சுடுகாட்டு வாசலில் இரவு 10.30 மணியளவில் தனது நண்பர்களுடன் அன்பரசு மது அருந்தியுள்ளார். அங்கு மறைந்திருந்து நோட்டமிட்ட ஒரு ரவுடி கும்பல், அன்பரசு வந்த காரின்மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதை கண்டு, அங்கு மது அருந்திய அன்பரசு உள்பட 7 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதில் அன்பரசுவை மட்டும் சிறிது தூரம் ஓட ஓட விரட்டி சென்று, அவரை ரவுடி கும்பல் சுற்றி வளைத்து, வீச்சரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்தது. இதனால் அன்பரசுவின் கழுத்து, கை-கால் உள்பட பல்வேறு உடல் பாகங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் அன்பரசு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அன்பரசு இறந்ததை உறுதி செய்தபின் ரவுடி கும்பல் தப்பி ஓடிவிட்டது.இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அன்பரசுவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.