பெரும் சோகம்.. தெரு நாய் விரட்டி கோடீஸ்வர தொழிலதிபர் பரிதாபமாக பலி..!
குஜராத்தை சேர்ந்த நரன்தாஸ் தேசாய் என்பவரால், 1892ல் துவங்கப்பட்ட நிறுவனம், வாக் பக்ரி தேயிலை குழுமம். இந்த நிறுவனம், தேயிலை ஏற்றுமதியில் முன்னணி வகிப்பதுடன், உள்நாட்டிலும் தேயிலை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொழிலில், 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இந்நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருந்தவர் பராக் தேசாய். இவர், கடந்த 15ம் தேதி தன் வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, தெரு நாய்கள் சூழ்ந்து இவரை துரத்தின. நாய்களிடம் இருந்து தப்பிக்க இவர் ஓடியபோது கால் இடறி கீழே விழுந்தார். அதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, 'வென்டிலேட்டர்' எனப்படும் செயற்கை சுவாச கருவி வாயிலாக சிகிச்சை பெற்று வந்த பராக் தேசாய், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
துடிப்புமிக்க இளைஞராக நிறுவனத்தை நடத்தி வந்த அவரது மறைவு, ஊழியர்களுக்கும், குடும்பத்தாருக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது. இவருக்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர். இவரது திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.