காதலியை 111 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்..  கேஸ் போடாமல் காதலனை ரிலீஸ் செய்த புதின் அரசு..!!

 

தனது காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரமான நபருக்கு ரஷ்யா அதிபர் புதின் மன்னிப்பு வழங்கியுள்ளனர். இந்த கொலையாளி உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக புதின் அந்த நபருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். அந்த நபருக்கு 17 ஆண்டு சிறை தண்டையை நீதிமன்றம் வழங்கிய நிலையில், இப்போது புதின் அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். புதின் மன்னிப்பு வழங்கிய நிலையில், அந்த கொலையாளியின் குற்றங்கள் அனைத்தையும் ரஷ்ய போலீசார் நீக்கியுள்ளனர். இதை அந்த பெண்ணின் தாயால் நம்பவே முடியவில்லை. தனது மகளைக் கொடூரமாகக் கொலை செய்த நபரை எப்படி இதுபோல விடுவிக்க முடியும் என்று அந்த தாய் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இந்த கொடூர குற்றத்தைச் செய்த நபர் 27 வயதான விளாடிஸ்லாவ் கன்யூஸ் என்ற இளைஞர் ஆவார். இவர் 23 வயதான வேரா பெக்டெலேவா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அந்த பெண் பிரேக்அப் செய்துவிட்டார். கன்யூஸிடம் தனது உடைமைகள் இருந்ததால் அதைத் திரும்பித் தருமாறு வேரா கேட்டுள்ளார்.



 தனது வீட்டிற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கன்யூஸ் கூறிய நிலையில், அதை நம்பிய வேராவும் அங்கே சென்றுள்ளார்.  வீட்டிற்கு வந்த வேராவை பிடித்து வைத்த கனஅயூஸ் அவரை சுமார் மூன்றரை மணி நேரம் சித்திரவதை செய்துள்ளார். அவரை கொடூரமாகப் பலாத்காரம் செய்த அவன், கொடூரமாகக் கொலை செய்துள்ளான். அவன் மெதுவாகக் கத்தியால் மீண்டும் மீண்டும் 111 முறை குத்தியுள்ளான். இதில் அந்த பெண் வலியால் துடி துடித்துள்ளார். அப்போதும் விடாத அந்த மிருகம், இரும்பு வளையத்தை வைத்து அந்த பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளான். இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூரம் நடக்கும் போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கும் கேட்டுள்ளது.

அவர்கள் ரஷ்ய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை ரஷ்ய போலீசார் காப்பாற்றவில்லை. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தமாக ரஷ்யாவை அதிர வைத்தது. இந்த வழக்கு விசாரணையில் இதை மிகக் கொடூரமான கொலை என்று குறிப்பிட்ட ரஷ்ய நீதிமன்றம், சாடிஸ்ட் மனநிலை கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படியொரு கொடூரத்தை அரங்கேற்ற முடியும் என்று கூறி, அந்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.



அதன்படி அவர் சில மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். இருப்பினும், இடையில் ரஷ்யா உக்ரைன் போர் ஏற்பட்டது. அப்போது ரஷ்யாவுக்குக் கூடுதல் வீரர்கள் தேவைப்பட்டுள்ளனர். அப்போது சிறையில் இருப்போரும் உக்ரைன் போரில் சண்டையிடலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், விளாடிஸ்லாவ் கன்யூஸ் ரஷ்யாவுக்காகப் போரிட்டுள்ளார். இந்த ஒரே காரணத்திற்காக அவருக்கு ரஷ்ய அதிபர் என்ற அடிப்படையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி புதின் மன்னிப்பு வழங்கியுள்ளார்.  ரஷ்ய அதிபரே மன்னிப்பு வழங்கியதால் விளாடிஸ்லாவ் கன்யூஸ் மீது இருந்த அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். கொடூரமாகக் கொலை செய்த அந்த நபரை இப்படி ரிலீஸ் செய்வது சரியான நடைமுறை இல்லை என்று பலரும் கடுமையாகச் சாடியுள்ளனர்.