கல்லறையாக மாறும் காசாவின் முக்கிய மருத்துவமனை.. பகீர் கிளப்பும் உலக சுகாதர அமைப்பு..!!
காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்-ஷிபா, கல்லறையாக மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அல்-ஷிபா மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை அருகே தொடர்ந்து வரும் சண்டையின் காரணமாக குறைமாதக் குழந்தைகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அல்-ஷிபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மருத்துவமனை பாதுகாப்பு தொடர்பாக இஸ்ரேலிய தரப்புடன் தான் பேசி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே அல்-ஷிபா மருத்துவமனையை தனது பதுங்குமிடமாக ஹமாஸ் பயன்படுத்தி வருவதாக இஸ்ரேலிய துருப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இஸ்ரேலில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காணொளியில் பேசிய யோவ் கேலன்ட், பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி தப்பி ஓடுவதாகவும், மக்கள் ஹமாஸ் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ஹமாஸ் பிடியில் இருந்து பிணைக்கைதிகளை விரைவில் விடுவிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
காசாவை முழுமையாக ஹமாஸின் பிடியில் இருந்து விடுவிப்போம் எனவும் தெரிவித்த அவர் இந்நடவடிக்கை இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமல்ல காசாவில் உள்ள மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றார். தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிககை 11 ஆயிரத்து 240ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் 4 ஆயிரத்து 630 பேர் குழந்தைகள் என்றும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.