undefined

நடிகர் விஜய்க்கு துரை வைகோ அட்வைஸ்... எரிச்சலில் ரசிகர்கள்!

 

நடிகர் விஜய்க்கு, மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேறூன்ற நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது தெரியாமலோ விஜய் துணை போய் விடக்கூடாது என்று துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் துரை வைகோ எல்லாம் எங்கள் தலைவருக்கு அட்வைஸ் செய்கிற அளவுக்கு நாங்கள் இன்னும் கீழிறங்கவில்லை என்று விஜய் ரசிகர்களும், தவெக கட்சியினரும் துரை வைகோவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்கக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், அரசியலை 'விஷ பாம்பு' என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், விஷ பாம்பு என்பது மதவாத சக்திகள்தான் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “"விஜய் சினிமா வானில் ஜொலிக்கும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது ஒரு கடினமான உலகம். நான் அரசியலுக்கு வரும்போது 'நச்சு நிறைந்த அரசியல்' என்று சொன்னதுபோலவே, விஜய்யும் அரசியலை 'விஷ பாம்பு' என்று சொல்லியிருக்கிறார்.

விஷ பாம்பு என்பது மதவாத சக்திகள்தான் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேறூன்றக் கூடாது. அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது தெரியாமலோ விஜய் துணை போய் விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் படித்தவர், விவரமானவர். கண்டிப்பாக நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்றார்.  

இதற்கு தான் விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் துரை வைகோவை ட்ரோல் செய்து வருகின்றனர். உங்கள் தந்தை வைகோ பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததும், மோடியுடன் அமர்ந்திருந்ததும் தெரியாதா? அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 2026க்குப் பின் மதிமுக முழுமையாக காணாமல் போய்விடும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.