டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட சம்பவம்... 8 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (28). சரக்கு வாகனம் ஓட்டி வரும் இவரை பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முன்விரோதம் காரணமாக பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இந்நிலையில், காளிக்குமார் கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் கூறி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை – திருச்சுழி சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், ‘உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. மறியலில் ஈடுபடாமல் கலைந்து செல்லுங்கள்’ என்று டிஎஸ்பி காயத்ரி கூறினார்.இந்நிலையில், போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் திடீரென டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியை இழுத்து தாக்கினார். இதை தடுக்க முயன்ற பிற போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு மோதல் உருவானது. டிஎஸ்பி காயத்ரி தலைமுடி இழுக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு 7 பேரைக் கைது செய்தனர். மேலும், ஒருவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 9 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த வீடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!