undefined

 

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு போனஸ்?!

 
 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உற்பத்தித் துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது.

தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அரசின் தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இணைந்து, தமிழகம் இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக மாறி வருவதுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் "1 டிரில்லியன் அமெரிக்க டாலர்” பொருளாதாரத்தை (one trillion economy) நோக்கி பயணிக்கிறது. 

தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும், உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000 என்பதைத் தளர்த்தி அனைத்து ‘சி’ மற்றும் ’டி’ பிரிவு பணியாளர்களுக்கு 2023-24ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகைஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400/- ம் அதிகபட்சம் ரூ.16800/- ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்” என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.