இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு... 698 பேர் படுகாயம்!

 

 

மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் கடந்த வார இறுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 698 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அதிகாரிகள் செய்திக் குறிப்பில் தெரிவித்தனர்.

 

பலத்த குண்டுவீச்சு மற்றும் மீட்புக் குழுவினரின் பற்றாக்குறைக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட சிலர் இடிபாடுகளுக்கு அடியில் இருப்பதாக நேற்று செய்தி நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இந்த நடவடிக்கையின் போது, ​​இஸ்ரேலியப் படைகள் அகதிகள் முகாமில் இருந்து  நோவா அர்கமணி (25), ஷ்லோமி ஜிவ்(40), அல்மோக் மீர் ஜான்(21), மற்றும் ஆண்ட்ரே கோஸ்லோவ்(27) என நான்கு பணயக் கைதிகளை மீட்டனர். 

இஸ்ரேலிய கணக்கின்படி சுமார் 1,200 பேரைக் கொன்ற ஹமாஸ் வெறியாட்டத்திற்குப் பிறகு, இஸ்ரேல் காசாவில் பழிவாங்கும் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியது. இதுவரை 37,084 பேரைக் கொன்று உள்ளதாகவும் 84,494 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.