undefined

  மீண்டும் விரிவாக்கம் செய்யப்படும் கோவை மாநகராட்சி... ! 

 


 தமிழகத்தில் சென்னைக்கு அடுத்துட் தொழில் நகரமாக திகழ்ந்து வருகிறது  கோவை மாநகராட்சி .  இது, 257.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது.  இம்மாநகராட்சியில் தற்போது உள்ள  100 வார்டுகள்  5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2006-2011 காலக்கட்டத்தில் கோவை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது. தொடர்ந்து, 2011ம் ஆண்டு குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 1 கிராம ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன.இதன்பிறகு, பழைய 72 வார்டுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 60 வார்டுகளாக குறைக்கப்பட்டன.

அத்துடன், புதிதாக இணைக்கப்பட்ட 11 உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 40 வார்டுகளாக உருவாக்கப்பட்டன. ஆக மொத்தம் கோவை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 72லிருந்து  100 ஆக உயர்த்தப்பட்டன.  கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், மீண்டும் எல்லையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.  
மாநகராட்சி எல்லையை ஒட்டி 5 கிலோ மீட்டர் தூர சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் என மொத்தம் 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, கோவை மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம், மாநகராட்சியின் எல்லை 438.54 சதுர கிலோ மீட்டராக விரிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலூர் ஆகிய 4 பேரூராட்சிகள், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளாணைப்பட்டி, கள்ளிப்பாளையம், சின்னியம்பாளையம், சீரப்பாளையம் ஆகிய 11 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 16 உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.  இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகு, மீண்டும் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும். அதே போல்  மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயரக்கூடும்.  அதே நேரத்தில் ஒவ்வொரு வார்டுகளின் எல்லையும் மேலும் விரிவடையும் வாய்ப்புகள் உள்ளன. வார்டுகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகள் மறுவரையறை செய்த பின்னரே, அடுத்தக்கட்ட உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ,“ கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் தொடர்பான கருத்துரு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னரே, இதுகுறித்த  அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரமடையும்’’ எனக் கூறியுள்ளார். 2025 ஜனவரிக்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!