undefined

அதிர்ச்சி... ஜீவசமாதி ஆகப் போவதாக பொதுமக்கள் பள்ளம் தோண்டி போராட்டம்!

 
 


மனைப்பட்டா வழங்காததைக் கண்டித்து புதுச்சேரி செட்டிகுளம் பகுதியில் வசிக்கும் மக்கள் ஜீவசமாதி ஆகப்போவதாக பள்ளம் தோண்டி போராட்டம் நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை அடுத்துள்ள ராதாகிருஷ்ணன் நகர் வீராம்பட்டினம் சாலையில் செட்டிகுளம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்காக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக அந்த பகுதி மக்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த மக்கள், சாலையோரத்தில் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பின்புறம் உள்ள இடத்தில் தங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்திலும் தங்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகளை திரும்ப ஒப்படைத்தனர். இருந்தும் இதுநாள் வரை அவர்களது கோரிக்கை குறித்தும், அவர்கள் அளித்த மனு மீதும் எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரையும், அமைச்சர்களையும் சந்தித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை  செட்டிகுளத்தில் சுமார் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அதில் ஆண்கள், பெண்கள் என பத்துக்கும் மேர்பட்டோர் குழிக்குள் இறங்கி ஜீவசமாதி அடையப் போவதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரியாங்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.