இந்தியர்களை குறி வைக்கும் சீன மோசடி கும்பல்.. ஆய்வில் கண்டுபிடித்த போலி கடன் செயலிகள்..!!

 

போலி கடன் செயலிகள் மூலம் சீனாவை சேர்ந்த மோசடி கும்பல் இந்தியர்களை குறிவைத்து ஏமாற்றி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

முறைகேடான மற்றும் போலி கடன் செயலிகள் மூலமாக எளிய தவணை முறையில் நிறைய கடன் தருவதாக கூறி ஆயிரக்கணக்கான இந்தியர்களை சீனாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளதாக சைபர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த செயலிகள் மூலமாக ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துக் கொண்டு, கடனுக்கான செயலாக்க கட்டணத்தையும் அந்த நபர்களிடம் இருந்து வசூலித்துக் கொண்டு எந்தவித கடன் தொகையும் கொடுக்காமல் இந்த மோசடிக் கும்பல் கம்பி நீட்டிவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மோசடிக் கும்பல் சீன பேமெண்ட் வசதியையும் இந்திய பண மோசடி வழிகளை பயன்படுத்தியும் சட்டத்தின் கண்ணில் மாட்டாமல் எளிதில் தப்பித்து விடுகிறார்கள் என்றும் இதனால் இவர்கள் மீது எந்தவித சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK கூறியுள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதாலும் ஒழுங்குமுறை கண்காணிப்பு குறைவாக இருப்பதாலும் இவர்கள் சீன பேமெண்ட் வழியை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலிருந்து பணத்தை திருட்டுத்தனமாக கொண்டு வருவதற்கு இந்த வழி பாலமாக செயல்படுகிறது. இதன் வழியாக செல்லும் பணத்தை கண்காணிக்கவோ, யாருக்குச் செல்கிறது என்று பின் தொடரவோ முடியாது என சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக செப்டம்பர் 8 அன்று நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபலமான வங்கியுடையது போன்ற போலியான செயலியை உருவாக்கி, அதை விளம்பரப்படுத்தியுள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வங்கியின் ஆண்டு வருவாய் மட்டுமே 23 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையில் மட்டுமே, இந்த போலி செயலி மூலமாக ரூ.37 லட்சத்தை மோசடிக் கும்பல் சேகரித்துள்ளனர். இதற்காக சீன மோசடிக் கும்பல் ஆண்டிராய்டு தளங்களில் 55 போலி செயலிகளை உருவாக்கி வைத்துள்ளனர்.

இந்தோனேசியா, மலேசியா, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கொலம்பியா ஆகிய நாடுகளிலிருந்து சீன மோசடிக் கும்பல் கட்டணம் செலுத்தும் வழியை பயன்படுத்தியுள்ளார்கள். உடனடி கடன் தரும் வகையிலான போலி கடன் செயலிகள், முறைகேடான செயலிகளை விளம்பரபடுத்துதல், தனிநபர் விவரங்களை சேகரித்தல், கடனுக்கான செயலாக்க கட்டணங்களை வசூலித்தல் போன்ற வழிகளில் சீனக் கும்பல் மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.