பொங்கலன்று நடைபெறவுள்ள சி.ஏ. தேர்வை தேதி மாற்ற வேண்டும்... சீமான் வலியுறுத்தல்!
பொங்கல் திருநாளன்று நடைபெறவுள்ள சி.ஏ. தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி 14 மற்றும் 16 தேதிகளில் பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) படிப்புக்கானத் தேர்வுகள் நடத்தப்படும் என்று இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் திருநாளன்று தேர்வுகள் நடத்தி, தமிழர் தேசிய விழாவினைச் சீர்குலைக்கும் இந்திய ஒன்றிய அரசின் முயற்சி வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே, கடந்த 2023-ம் ஆண்டு இதேபோன்று இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான முதன்மைத் தேர்வினை பொங்கல் நாளன்று வைத்து, தமிழர்கள் தேர்வில் கலந்துகொள்ள முடியாத சூழலை உருவாக்கியது பா.ஜ.க. அரசு. இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் வங்கி தேர்வு வாரியத்தின் ஒருதலைபட்சமான அச்செயலை அப்போதே நான் வன்மையாகக் கண்டித்ததோடு, தேர்வினை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தேன்.
இந்திய ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழர்கள் எந்த விதத்திலும் தேர்வாகிவிடக் கூடாது என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் உள்நோக்கமுடைய தொடர்ச்செயல்பாடுகளின் நீட்சியே மீண்டும் மீண்டும் தைப்பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்தும் இந்திய ஒன்றிய அரசினது செயல்பாடாகும்.
தமிழர் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கும் பா.ஜ.க. அரசிற்கு குருநானக் ஜெயந்தி அன்றோ, மகாவீர் ஜெயந்தி அன்றோ, தீபாவளி, தசரா போன்ற விழா நாட்களிலோ தேர்வுகள் அறிவிக்கும் துணிவிருக்கிறதா? தமிழ்ப்பண்பாட்டை அவமதித்து தமிழர்களை மட்டும் மீண்டும் மீண்டும் இந்திய ஒன்றிய அரசு சீண்டிப்பார்ப்பது என்பது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கிறேன்.
ஆகவே, தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு பட்டயக் கணக்காளர் படிப்புக்கானத் தேர்வுகளை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டுமென இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்துத் தேர்வு தேதியினை வேறு நாளுக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!