மூச்சை முட்டும் காற்று மாசு.. செயற்கை மழை உருவாக்க திட்டமிடும் டெல்லி அரசு..!!

 

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயறகை மழை திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குளிர்காலங்களில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நடப்பாண்டும் காற்று மாசால் தலைநகர் டெல்லி திணறி வருகிறது. காற்று கடுமையாக மாசுபடுவதற்கு, அண்டை மாநிலங்களில் விவசாய எச்சங்கள் எரிப்பு, கட்டடங்கள் இடிப்பு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் காற்றுமாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக, கான்பூர் ஐஐடி நிபுணர்களுடன் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மற்றும் நிதி அமைச்சர் அதிஷி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். செயற்கை மழை மூலம் காற்றுமாசை கட்டுப்படுத்தலாம் என்ற தீர்வை ஐஐடி நிபுணர்கள் முன் வைத்துள்ளனர்.

டெல்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும்போது, செயற்கை மழை பரிந்துரையை அரசு முன்வைக்குமென தெரிகிறது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் செயற்கை மழையை உருவாக்க ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

செயற்கை மழையை உருவாக்க 40% மேக மூட்டம் தேவை எனப்படும் சூழலில், டெல்லியில் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேக மூட்டம் காணப்படும் என்றும் செயற்கை மழை திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் அந்த தேதிகளில் செயற்கை மழைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.